கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகேயுள்ள அ.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்- ஹேமலதா தம்பதி, தங்களின் நான்கு வயது குழந்தைக்கு நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (01/07/2020) நடைபெற்ற வாராந்திர முகாமில் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அன்று இரவு குழந்தை அழுதுகொண்டேயிருக்க தடுப்பூசி போட்டதால்தான் குழந்தை அழுகிறது என பெற்றோர் நினைத்துத் தூங்க வைத்துள்ளனர். மறுநாள் அதாவது நேற்று (02/07/2020) காலை எழுந்து பார்த்தபோது அந்தக் குழந்தை எதிர்பாராத விதமாக இறந்து விட்டது.
தடுப்பூசி போடப்பட்டதால் தான் குழந்தை இறந்துள்ளது எனக் கருதி, தடுப்பூசி போட்ட மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியரைக் கைது செய்ய வலியுறுத்தி நடுவீரப்பட்டு காவல் நிலையத்தைப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து கலைந்துச் சென்றனர்.
பின்னர் நடுவீரப்பட்டு காவல்துறையினர் குழந்தையின் இறப்பைச் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து குழந்தையின் சடலத்தைக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.