கிள்ளை பேரூராட்சி பகுதிகளில் உப்பு நீராக மாறும் நிலத்தடி நீரை பாதுகாக்கக் கோரி, அனைத்துக் கட்சிகளின் விவசாய சங்கங்கள் சார்பில் சிதம்பரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை வரும் 17-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டத்திற்கு, சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனிடம் டெல்டா பாசன சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கற்பனை செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
அதில், "கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி வழியாக ஓடும் பக்கிங்காம் கால்வாயில் உப்புநீர் புகாமல் இருப்பதற்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ 3.30 கோடி செலவில் வாய்க்கால்களை அகலப்படுத்தியும், ஆழப்படுத்தி தற்காலிக தடுப்பணை கட்டி கொடுத்தனர். இது விவசாயத்திற்குப் பேருதவியாக இருந்தது.
ஆனால் இப்போது இந்த நிலை பாதுகாக்கப்படாமல் பக்கிங்காம் கால்வாய் வழியாகப் பழையனாற்று வடிகால் வாய்க்கால் வழியாக உப்புநீர் புகுந்து பொன்னந்திட்டு, மானம்பாடி, சிங்காரக் குப்பம், கிள்ளை, தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு நீர் புகுந்து இப்பகுதி நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் இது போதாதென்று செயற்கையாக தனியார்த் தண்ணீர் விற்பனையாளர்கள் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் விற்பனைக்காக உறிஞ்சப்படும் நிலையும் உள்ளது. இதனால் ஆபத்து அதிகமாகிறது. இதன் விளைவாக அப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரம் மிகவும் ஆபத்தான சூழலை எட்டியுள்ளது. அதேபோல் விவசாயம் கடுமையாக நெருக்கடியைச் சந்தித்துள்ளது. எனவே உடனடியாக பக்கிங்காம் கால்வாயைப் பாதுகாத்து அதில் நிரந்தர தடுப்பு அணை கட்டிக்கொடுத்து அதன் மூலம் கிள்ளை பகுதி சுற்றுவட்ட ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி வரும் 17- ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.