Skip to main content

விளைநிலங்களைக் கையகப்படுத்திய என்எல்சி; மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

cuddalore district farmers land issue in nlc 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மின்சார உற்பத்திக்காக பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இரண்டாவது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்காக புவனகிரி தாலுகாவுக்கு உட்பட்ட கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி, மும்முடிச்சோழன் ஆகிய கிராமங்களில் உள்ள 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் 2006 ஆம் ஆண்டில் என்.எல்.சியால் ஒப்பந்தம் போடப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு 6 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. அதேசமயம் விவசாயிகள் அந்த விளைநிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.

 

இதனிடையே புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக விருத்தாசலம் மற்றும் புவனகிரி தாலுகாக்களுக்கு உட்பட்ட 25 கிராமங்களிலுள்ள 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களையும் கையகப்படுத்த என்.எல்.சி முயன்று வருகிறது. மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படும் இந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, நிலம் கொடுக்கும் குடும்பத்தவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர் பணி மற்றும் சில நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் தான் நிலங்களை கொடுப்போம் என அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 

cuddalore district farmers land issue in nlc 

அதேசமயம் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படுவதில்லை, நிலத்தடி நீர்மட்டம் அகல பாதாளத்திற்கு சென்றுவிட்டது, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே என்.எல்.சி நிறுவனம் முழுமையாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதேபோல் '2006_ல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வெறும் 6 லட்சம் மட்டும் இழப்பீடு  வழங்கியது போதாது' தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழங்குவது போல 25 லட்சம் என சமமான இழப்பீடு வழங்க வேண்டும்',  'வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்'  என வலியுறுத்தி ஏற்கனவே நிலங்கள் கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்ட விவசாயிகளும் தற்போது நிலங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதையடுத்து ஏற்கனவே 6 லட்சம் வழங்கப்பட்ட நிலங்களுக்கு கருணைத் தொகையாக மேலும் 3 லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகள் இதனை ஏற்காமல் சமமான இழப்பீடு வழங்கினால் தான் நிலங்களை ஒப்படைப்போம் என கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் கம்மாபுரம் அருகேயுள்ள வளையமாதேவி, கரிவேட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம்  உள்ளிட்ட கிராமங்களில், கடந்த  2006 ஆம் ஆண்டு நிலங்கள் ஒப்பந்தம் போடப்பட்ட நிலப்பரப்புகளை கையகப்படுத்துவதற்காக என்.எல்.சி நிறுவனம் தற்போது சமப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. நேற்று பொக்லைன், புல்டோசர் போன்ற ராட்சத இயந்திரங்களுடன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வளையமாதேவியில் குவிக்கப்பட்டு கிராமம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ.மகேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.கார்த்திகேயன், கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் நிலத்தை சமன் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வளையாமாதேவியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் பா.ம.கவினர் மற்றும்  விவசாயிகளை கைது செய்து சேத்தியாத்தோப்பு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதையடுத்து  இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது காவல்துறையினர் வளையமாதேவி  கிராமத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

 

cuddalore district farmers land issue in nlc 

இதனால் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கிராமத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து,  விவசாய நிலங்களை சமன்படுத்தும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் அக்கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமாரிடம் தங்களது குறைகளை எடுத்து கூறினர். தங்களையும், தங்களது கிராமத்து விவசாயிகளையும் என்.எல்.சி பழிவாங்குவதாகவும், மாவட்ட  நிர்வாகம் என்.எல்.சிக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்பட்டு வஞ்சிப்பதாகவும், நிரந்தர வேலை சமமான இழப்பீடு வழங்காதவரை  ஒரு பிடி மண்ணை கூட எடுத்து விடமாட்டோம் எனவும் கூறினர். பின்னர் ஆத்திரமடைந்த அக்கிராம விவசாயிகள் திடீரென விருதாச்சலம்- சிதம்பரம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், பெண்கள், முதியவர்கள் என்று கூட பாராமல் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

 

இதற்கிடையில் உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் என்.எல்.சிக்காக கட்டாயப்படுத்தி, மிரட்டி  நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் எனவும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். என்.எல்.சி நிறுவனமும் மாவட்ட நிர்வாகமும் நிலங்களை கையகப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாலும், பா.ம.க முழு கடையடைப்புக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாலும் மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்