சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை பொருத்தவரை தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் ஒருவர் மீது, மற்றொருவர் கடுமையான விமர்சனங்களை வைப்பார்கள், கட்சிகளும் வைக்கும். அதற்கு காரணம், தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக. வேட்பாளர்களும் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதிர்த்து போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஏதாவது விவகாரம் கிடைத்தாலும் பேசி வாக்குகளை கவர நினைப்பார்கள். தேர்தல் முடிவுக்கு பின் ஓரிரு மாதங்களில் இருவரும் சகஜமாகிவிடுவார்கள். இதுதான் பெரும்பாலும் நடைமுறை.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ளவர் மீது தோல்வியை சந்தித்த வேட்பாளர், காரசாரமாக சமூகவளைத்தளங்களில் புகார் சொல்ல பிரச்சனை கிளம்பியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காலியாக இருந்த குடியாத்தம் ( தனி ) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும்கட்சியான அதிமுக சார்பில் கஸ்பா.மூர்த்தி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் பேரணாம்பட்டை சேர்ந்த காத்தவராயன் நிறுத்தப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் காத்தவராயன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கஸ்பா மூர்த்தி தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குடியாத்தம் பெயரில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில், அதிமுகவை சேர்ந்தவரும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனவருமான கஸ்பாமூர்த்தி, ஒரு தகவலை பதிவுட்டுள்ளார். அது, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரின் அராஜக லீலைகள் என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ள தகவலில், அரசு தடை செய்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யத் தூண்டுதல் விற்பனை செய்பவரிடம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்தல், தொகுதிக்கு உட்பட்ட நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு டெண்டர் எடுத்துள்ள நபர்களிடம் கமிஷன் கேட்டு மிரட்டல் விடுவது. தொகுதிக்கு உட்பட்ட நகரப்பகுதிகளில் மற்றும் ஒன்றிய பகுதியில் அமைந்துள்ள பட்டாசு கடைகளுக்கு மாமூல் கேட்டு மிரட்டல் விடுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். இவன்.. கஸ்பா ஆர்.மூர்த்தி. குடியாத்தம் நகரம் என வெளியிட்டுள்ளார்.
இந்த தகவலை பார்த்த திமுக பிரமுகர்கள் வாட்ஸ்அப் குழுவிலேயே பதில் தந்துள்ளனர். இந்த தகவலை எம்.எல்.ஏ காத்தவராயன் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, பெரியதாக கண்டுக்கொள்ளவில்லையாம். ஆனால், அந்த பதிவுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பதிவுகள் போட அதன்பின்பே அதிருப்தியடைந்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23ந்தேதி காலை குடியாத்தம் அதிமுக சட்ட மன்ற வேட்பாளர் கஸ்பா.மூர்த்தி மீது, திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன், குடியாத்தம் காவல்நிலையத்தில், தன்னைப்பற்றி ஆதரமற்ற வகையில் தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்பிவருகிறார். என்மீது அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மென புகார் கொடுத்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட அதிமுக கஸ்பா,மூர்த்தி, மதியம் 2 மணியளவில் காவல்நிலையம் சென்று, திமுக எம்.எல்.ஏ மீது என் மீது வீணாக புகார் தருகிறார், மிரட்டுகிறார், என்னைப்பற்றி அவர்தான் அவதூறு பரப்பி வருகிறார் என புகார் கொடுத்துள்ளார். இரண்டு புகார்களையும் பெற்ற போலிஸார், இதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
இது குடியாத்தம் தொகுதியை தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என இருதரப்பும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.