ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகார் அளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து யாருடைய பெயரும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் காலங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்கக்கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல், தேர்தலின் போது பணம் பெற்ற வாக்காளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி அருண் நடராஜன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி சத்தியநாரயணன் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்திருந்த நிலையில், அபிராமபுரம் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை தனி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வருமான வரித்துறை அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடைய அனைவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து பணப்பட்டுவாடா தொடர்பான மதிப்பீட்டின் தற்போதைய நிலை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கங்கள் கேட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 21-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.