கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் உள்ளிட்டோரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா காலத்திலும் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மார்ச் முதல் இதுவரை 1,52,118 பேருக்கு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களுக்கு அவசர கால சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. 1,52,118 பேரில் 63,633 பேருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுய தீங்கு ஏற்படுத்தி கொண்ட 52,849 பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாம்பு கடித்த 19,947 பேருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 4,494 குழந்தைகளுக்கு அவசர கால உயிர்காக்கும் சிகிச்சைகளும், 4,432 பேருக்கு மாரடைப்பிற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளது." என்றார்.