Skip to main content

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதன் காரணம் என்ன? -மருத்துவரின் விளக்கம்!

Published on 29/07/2020 | Edited on 30/07/2020

 

cuddalore corona rate

 

கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,788. இவர்களில் 1,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விருத்தாசலம் வட்டாட்சியர் மற்றும் நெல்லிக்குப்பம் மருத்துவர் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக ஒவ்வொரு நாளும் சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது எதனால்? என்பது குறித்து கடலூர் நுரையீரல் சிறப்பு மருத்துவர் பால.கலைக்கோவன் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அன்று மட்டும் 165 பேருக்கு கரோனா  தொற்று உறுதியாகியுள்ளது.  அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை 103 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 143 பேருக்கும், இன்று (புதன்கிழமை) 120 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் 2,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,700 பேருக்கு மேல் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.  

 

cuddalore


கடந்த சில நாாட்களாக கடலூர் மாவட்டத்தில் தொற்று அதிகமாக வெளிப்படுவதற்கு  இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முன்பாகவே சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் கூடுவதை விட மூன்று மடங்கு அதிகமாகக் கூடுகிறது. குறிப்பாக காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் போன்ற இடங்களில் பொது மக்களின் புழக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது. வார இறுதி நாளான சனிக் கிழமைகளில் கூடும் கூட்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்துக் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வெளியாகிறது. அதாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் அன்றுதான் கரோனா பரவும் என்றும் மற்ற நாட்களில் பரவாது என்றும் ஒரு தவறான எண்ணம் மக்கள் மனதில் இருப்பதாகத் தெரிகிறது. அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதைத் தவிர்ப்பது ஒவ்வொருவரின் நடவடிக்கைகளிலும் தான் உள்ளது.

இரண்டாவது கடந்த காலங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடி பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். ஆனால் தற்பொழுது மாவட்டத்தில் கரோனா பரிசோதனை ஆய்வுக்காக பல்வேறு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக் குழுவினர் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் போது நோய் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக வெளியாகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் 2 லட்சத்து 23 ஆயிரம் வீடுகளில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர். அவர்களில் 653 பேர் காய்ச்சல் உள்ளவர்கள், 296 பேர் மூச்சுத் திணறல் உள்ளவர்கள்,  3,051 பேர் இருமல் சளி உள்ளவர்கள். இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கரோனா அறிகுறி தென்பட்டவர்கள் மருத்துவமனைகளை, மருத்துவர்களை அணுகுவது ஒரு முறை என்றாலும் இப்போது முன்கூட்டியே அறிகுறியைக் கண்டுபிடிப்பதால் எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தாலும் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம், மருத்துவக் குழுவினர் இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அதேசமயம் பொதுமக்களும் இதற்கு முழுமையான ஆதரவு தரவேண்டும். இது தனி ஒருவருடைய பிரச்சனை அல்ல. அவரது குடும்பம், அவரது உறவினர்கள், அவரது நண்பர்கள் என ஒரு வாரத்தில் 47 பேருக்கு ஒருவர் மூலம் பரவ வாய்ப்புள்ளது. எனவே இது தனக்கான, தனி மனிதருக்கான பிரச்சனை என்று கருதி அலட்சியமாக இல்லாமல் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்குமான பிரச்சனை என்று நினைத்து பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூடுவதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்,  தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக சனிக்கிழமைகளில் கூட்டமாக கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் மழைக் காலம் என்பதால் மேலும் அதிக பொறுப்புணர்வோடு நடந்து கொள்வது பொது மக்களுடைய கடமையாகும்" என்றார்.

கரோனா தொற்று கூடுவதும் குறைவதும் மக்கள் கையிலும், அதை ஒழுங்கு படுத்தும் அரசின் கையிலும்தான் இருக்கிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்