விருத்தாசலம் அருகே மர்மமான முறையில் ஆட்டு கொட்டகை தீ பிடித்து எரிந்ததில் 30 ஆடு மற்றும் 2 மாடுகள் தீயில் கருகி இறந்தன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சியான். இவர் தனது மனைவி ராசாத்தியுடன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தென்னங்கீற்றினால் ஆட்டு கொட்டகை அமைத்து, ஆடு, மாடுகள் வளர்த்து தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்றிரவு ஆடு மாடுகளுக்கு தீவனம் வைத்த, பின்பு தனது வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது மர்மமான முறையில் ஆட்டு கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர்.
இத்தீவிபத்தில் ஆட்டுக் கொட்டகையில் இருந்த 30 ஆடுகள் மற்றும் இரண்டு மாடுகள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி இறந்தன. அக்கொட்டகை அருகே எவ்வித மின்சார கம்பியும் செல்லாததால், முன் விரோத காரணமாக தீ வைத்து கொளுத்தப்பட்டதா என பல்வேறு கோணங்களில் கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் கவியரசு ஆட்டு கொட்டகையை பார்வையிட்டு விசாரித்து வருகிறார். 30 ஆடு மற்றும் மாடுகள் தீயில் கருகி கிடப்பதை கண்டு அக்கிராமத்தினர் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.