நாகை மாவட்டம் பட்டினச்சேரியில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் பைப்லைன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென உடைந்து, நாகூர் முதல் வேளாங்கண்ணி வரையிலான கடல்நீர் முழுவதும் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் படர்ந்தது. கடலில் படர்ந்த கச்சா எண்ணெய்யின் வீரியத்தால் கடலோரத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதனால் ஆவேசமடைந்த நாகூர், பட்டினச்சேரி மீனவர்கள் பைப்லைனை முற்றிலும் அகற்ற வேண்டும் என தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். அதேநேரம் உடைப்பு ஏற்பட்ட குழாயை அடைக்கும் பணியை சிபிசிஎல் நிறுவனம் மேற்கொண்டது. சீரமைப்பிற்கு பிறகு மீண்டும் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கடலுக்கு அடியில் செல்லும் குழாய்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மீன்வர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடலில் கலந்த கச்சா எண்ணெய் கசிவினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. கடலுக்கு அடியில் அமைந்துள்ள சிபிசிஎல் பைப்லைனை முற்றிலும் அகற்ற வேண்டும் என நாகூரில் நடந்த ஏழு கிராம மீனவர்கள் கூட்டத்தில் அதிரடியாக முடிவு செய்தனர்.
இந்நிலையில், மீனவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக ஆட்சியரின் அறிவுறுத்தல்படி குழாயானது அகற்ற உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில் குழாயை அகற்றும் பணியில் சிபிசிஎல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.