திருச்சி மாவட்டம், முசிறி உட்கோட்டம், ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரூர் கிராமத்தில் வசித்து வருகிறவர் கலைவாணி(28). இவரது கணவர் நீலமேகம். இவர் சி.ஆர்.பி.எஃப். வீரராக தற்சமயம் காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.
கலைவாணி, அவரது கணவரின் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோடை காலம் காரணமாக நேற்று இரவு வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த ரூ. 1.27 இலட்சம் மதிப்பிலான 8 சவரன் தங்கத்தினாலான தாலியை அறுத்துக்கொண்டு தப்பித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கலைவாணி, ஜம்புநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஏற்று ஜம்புநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் மத்தியத் துணை ராணுவப் படை சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றிவரும் கலைவாணியின் கணவர் நீலமேகம் தனது வீட்டில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் குறித்து ஒரு வீடியோ பதிவில் பேசி அதனை சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டார். இது மற்ற சமுகவலைதள பக்கங்களிலும் பரவியது. அதில், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்குமாறும் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேற்கண்ட வீடியோ பற்றித் தெரிந்தவுடன் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, பாதிக்கப்பட்ட கலைவாணி மற்றும் துணை ராணுவப் படை வீரரான நீலமேகம் ஆகிய இருவரையும் தொலைபேசி வழியாக உடனடியாகத் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார். மேலும், சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவர் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, சந்தேக நபர்கள் சிலரிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த செயின் பறிப்பு வழக்கை விரைந்து கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.