வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயலால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நான்கு நாட்களாக மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியதோடு விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இலங்கை முல்லைத்தீவு பகுதியில் கரையை கடந்தது. இந்த புயல் சின்னம் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களாக மழை கொட்டித் தீர்த்துவருகிறது. கடலோர பகுதிகளில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆறுகளில் ஆங்காங்கே உடைப்பெடுக்கும் அபாயமும் உறுவாகியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் முதற்கட்டமாக சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தற்போது சூல் தண்டு உருளும் பருவத்தில் இருப்பதால் தொடர் மழையைத் தாங்கி நிற்கிறது. ஆனால், தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 30 நாட்களே ஆன இளம் பயிர்களும், கதிர்வந்த பயிர்களும் மழை வெள்ளத்தில் சாய்ந்து மூழ்கியுள்ளது. மழை தொடர்ந்தால் இளம் பயிர்கள் அழுகிவிடும். அதோடு விளைந்து சாய்ந்த பயிர்கள் முற்றிலுமாக அழுகிவிடும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனைபடுகின்றனர்.
இதுகுறித்து பந்தநல்லூரைச் சேர்ந்த பாரி உள்ளிட்ட விவசாயிகள் கூறுகையில், "முறையாக ஆறுகளும் வாய்க்கால்களும் தூர்வாரப்படாததே பயிர்கள் முழ்கக் காரணம். வழக்கமாக பெய்யக்கூடிய மழைதான், இந்த ஆண்டும் பெய்கிறது. வருடா வருடம் தூர்வாருவதற்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவழிக்காததால், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரிமிப்புக்கு உள்ளாகி தண்ணீர் வடிய வழியின்றி இப்படி பயிர்கள் முழுவதும் நாசமாகி இருக்கிறது. இதற்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்கிறார்கள்.