வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்துவருகிறது. கடந்த 18ஆம் தேதி கடலூரில் 15 செ.மீ. மழை பொழிந்த நிலையில், தற்போது கடந்த மூன்று நாட்களாக அதிகபட்சமாக 17.3 செ.மீ. மழை பொழிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிவது நின்றாலும் தொடர் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் மீளவில்லை. வயல்வெளிகள் மட்டுமல்லாது குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் வடியாததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதுடன், பல குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது.
கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புதுப்பாளையம், பாரதியார் நகர், முதுநகர், சீதாராம் நகர், வண்ணாரபாளையம், கோண்டூர், பாதிரிக்குப்பம், பச்சையாங்குப்பம், புதுப்பாளையம், குமளங்குளம், சேடப்பாளையம், பாதிரிக்குப்பம், சாவடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இந்தத் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக 20,500 ஏக்கர் நெற்பயிர்கள், 2,700 ஏக்கர் உளுந்து, 100 ஏக்கர் மக்காச்சோளம், 1,800 ஏக்கர் பருத்தி மற்றும் தோட்டப் பயிர்களான மல்லிகை பூ ஆகியவை 5 ஆயிரம் ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கடலூர் - புதுவை இணைக்கக் கூடிய கும்தாமேடு தரைப்பாலம் பெண்ணை ஆற்றில் முற்றிலுமாக மூழ்கி இரண்டு கரைகளிலும் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் ஓரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பேருந்து பயணிகள் நிழற்குடை கீழே சாய்ந்த நிலையில் ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு நிழற்குடை இடித்து ஆற்றில் தள்ளப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் கிராமத்தின் இருபக்கமும் செல்லக்கூடிய ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஓடையைக் கடந்து வெள்ளம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வழியாக கரை புரண்டு கிராமத்தைச் சுற்றிலும் சூழ்ந்துள்ளது. இதனால் அம்மக்கள் கிராமத்தைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனித் தீவாக மாறிப்போன இக்கிராம மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வெளியேற முடியாத சூழலில் உள்ளனர். இதேபோல் அருகிலுள்ள இளமங்கலம், ஆலிச்சிக்குடி, ஆலந்துறைப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.