Skip to main content

பயிர்க் காப்பீட்டு திட்டம்: பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

Crop Insurance Scheme: Tamil Nadu Chief Minister's letter to the Prime Minister!

 

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (29/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு நேற்று (28/07/2021) எழுதியுள்ள கடிதத்தில், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினைக் குறைக்கும் வகையில், உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, முன்பு இருந்தபடி 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணப் பங்கினைத் திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

 

வேளாண்துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர், தமிழகத்தில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒருமுறைக்கும் மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகிய மூன்று தொலைநோக்குப் பார்வையுடன் வேளாண்மைக்கென தனி வரவு - செலவுத் திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய  திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழகம் வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறது என்றும், தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளினால், காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவுசெய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் தனது கடிதத்தில் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 

இந்த நிலையில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மத்திய அரசின் பங்கினை 49 விழுக்காட்டில் இருந்து, பாசனப் பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதால், 2016 - 2017இல் 566 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசின் பங்கு, 2020 - 2021இல் 1,918 கோடி ரூபாயாக, அதாவது 239 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கரோனா பெருந்தொற்று உள்ள இந்த காலகட்டத்தில் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரித்துவரும் நிலையில், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்கு சவாலாகவும், கடினமாகவும் உள்ளது என்றும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

எனவே, பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்கீட்டினைக் குறைக்கும் வகையில், உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முறையே 49:49:2 என்ற விகிதத்தில் உடனடியாக மாற்றியமைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்