விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஓடும் வராக நதியில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு முதலை ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த கத்தியால் அந்த முதலையை தலையை துண்டாக வெட்டிப்போட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் முதலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்த பின்பு தலையை துண்டித்தது யார் என்பது குறித்து அப்பகுதி இளைஞர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்த முதலை 2 அடி நீளமுள்ள ஒரு குட்டி முதலை போன்று உள்ளது. இதேபோன்று 4 குட்டிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு செவலபுரை மக்கள் பார்த்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரு குட்டி முதலை மட்டுமே இறந்துள்ளதால் மீதமுள்ள மூன்று குட்டி முதலைகள் மற்றும் அதன் தாய் முதலை வராக நதியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நதியோர கிராம மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து வெளியேறி செல்லும் தண்ணீர் வாய்க்காலில் முதலைகள் சர்வசாதாரணமாக வாழ்கின்றன. இந்த முதலைகள் கரையோரப் பகுதியில் மேய்ச்சல் ஆடுகளையும் கடித்து கொன்று வருகின்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. ஆனால் விழுப்புரம் மாவட்டம் வராக நதியில் முதலையும் குட்டிகளும் வாழ்கின்றன என்பது தற்போது புதிய செய்தியாக உள்ளது. எனவே முதலையையும் அதன் குட்டிகளையும் கண்டுபிடித்து பண்ணைகளில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.