சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓடும் வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் முதலைகள் உள்ளதால் அடிக்கடி இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் முதலைக் கடிக்கு ஆளாகிப் பல பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கால் கைகளை இழந்தவர்களும் சிகிச்சை பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தப் பகுதியில் பிடிக்கப்படும் முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்கரமாரி ஏரியில் விடப்படுகிறது. இந்த ஏரியில் விடப்படும் முதலை மழை மற்றும் வெள்ள காலங்களில் வெளியேறி குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தஞ்சமடைகிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இது அச்சுறுத்தலாகவே உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருமலை என்ற தொழிற்கல்வி மாணவர் முதலை கடித்து உயிரிழந்தார். எனவே சிதம்பரம் பகுதியில் பிடிக்கப்படும் முதலையைக் கொண்டு தனியாக சிதம்பரம் பகுதியில் முதலைப்பண்ணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அதற்கான இடத்தை தேர்வு செய்து அளிக்க வேண்டும் என சிதம்பரம் வனத்துறை சரக அலுவலர் சரண்யா சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் ஸ்வேதா சுமனை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இவருடன் சமூக ஆர்வலர் செங்குட்டுவன், திமுக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கண்ணதாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.