Skip to main content

''ஹரியானாவைச் சேர்ந்த குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி'' - தி.மலை ஏடிஎம் கொள்ளை குறித்து ஐஜி கண்ணன் பேட்டி

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

"Criminals from Haryana are sure to be involved" - IG Kannan interviewed about T. Malai ATM robbery

 

கடந்த 12ஆம் தேதி திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்களில் 70 லட்சத்திற்கும் மேலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இந்த நிலையில் ஐஜி கண்ணன் இந்த சம்பவம் தொடர்பாகவும், குற்றவாளிகளைப் பிடித்தது தொடர்பாகவும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்பொழுது பேசிய அவர், ''கடந்த 12 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் 4 ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் ஒரு லீட் கிடைத்துள்ளது எனச் சொல்லி இருந்தேன். அப்படி கிடைத்த அறிவியல் பூர்வமான ஆதாரத்தை வைத்து நம்முடைய டீம் மூன்று இடத்தில் ஆபரேட் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்று கர்நாடகா கோலாரில் கேஜிஎஃப் இடத்தில், இன்னொன்று குஜராத்தில் ஒரு டீம் உள்ளார்கள். 

 

இன்னொரு டீம் ஹரியானாவில் உள்ளார்கள். இதில் ஹரியானாவைச் சேர்ந்த குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த டீம்கள் பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் ஹோட்டலில் தங்கி இருந்து இந்த இடத்தை எல்லாம் கண்காணித்து அதன் பிறகு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் கோலாரில் இரண்டு நபர்களை நாங்கள் விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். அதேபோல் இந்த குற்றத்தை செய்துவிட்டு தப்பித்து போனவர்களை குஜராத்தில் தடுத்து நிறுத்தி அங்கே ஆறு பேரிடம் விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். இதுபோக விமானம் மூலமாக ஹரியானா சென்ற இரண்டு பேரை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். இதுதான் தற்பொழுது சென்று கொண்டிருக்கக் கூடிய விசாரணை. இந்த விசாரணை இன்னும் முடியவில்லை. திருட்டில் ஈடுபட்டவர்கள் ஹரியானாவிலிருந்து வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்ட சில பேருடைய மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்துள்ளது. விசாரணை விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்