கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலரான பக்கிரிசாமி தனது பள்ளியில் பயின்று வரும் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அது தொடர்பான வழக்கில் தற்போது கைது செய்யப்படுள்ளார். திமுகவை சேர்ந்த இவரை திமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், திமுக கட்சியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் 5 வயது குழந்தையை அப்பள்ளியின் தாளாளரும், திமுக நகர்மன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
தெய்வத்தைப் போன்று கொண்டாடப்பட வேண்டிய பிஞ்சுக் குழந்தையை பாலியல் கொடுமை செய்ய அவரது தாத்தா வயதில் உள்ள தாளாளருக்கு எப்படி மனம் வந்தது? அவருடைய பள்ளியில் பயிலும் பிற குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? இத்தகைய மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடத் தகுதியற்றவர்கள்.
- போக்சோ சட்டத்தின் கீழ் கவுன்சிலர் கைது!
- “பாரபட்சமின்றி துரிதமான நடவடிக்கையை எடுத்திடுவோம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
- “13 மணி நேரமாக எந்த நடவடிக்கையும் இல்லை..” - விருத்தாசலம் பாலியல் வழக்கில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
குற்றஞ்சாட்டப்பட்ட பக்கிரிசாமி புகார் கொடுக்கப்பட்டு 12 மணி நேரத்திற்குப் பிறகு தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமான நடவடிக்கை இல்லை. மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்த பக்கிரிசாமியை உடனடியாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவதன் மூலமாகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகவும் இத்தகைய நிகழ்வுகள் இனியும் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.