
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற ரயில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கிச் செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள ஓங்கூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயிலில் இருந்த பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் ஆபத்தான நிலையில் தண்டவாள பகுதிகளில் நின்று வருகின்றனர். அதேநேரம் தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக ரயில்வே துறையும் தகவல் வெளியிட்டுள்ளது.