Skip to main content

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - உ. வாசுகி 

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ. வாசுகி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், வரும் 24ம் தேதி கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் மாவட்ட கட்சி வரலாறு நூல் வெளியிடப்படுகிறது. 

 

 இந்நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் மக்கள் ஒற்றுமை கலை இரவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 

v

 

கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் 1920 அக்டோபர் மாதத்தில் தொடங்கியது,  2020 -ல் நூறாண்டையொட்டி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அற்பணிப்பு, பங்களிப்பு, மக்கள் பிரச்சினையை, பிரச்சார இயக்கம் குறித்த பங்கேற்பு குறித்து நூல் வெளியீட்டு விழாவும் இதன் ஒரு பகுதியாகும்.  மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையான ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் தடுக்க முன்வர வில்லை.  மாறாக ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் டெல்டா பகுதி பாதிப்படையும் நிலை உள்ளது.  இதனை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.  இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டம் நடைபெறும்.

 

 கடலூர் மாவட்டத்தில் சொத்துவரி, தொழில்வரி பலமடங்கு உயர்த்தியுள்ளனர் இதனால் வியாபாரிகள், ஏழைமக்கள், நடுத்தர வாதிகள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.  நிதியை உயர்த்த பல வழிகள் உள்ளது ஏழைகளிடமும், நடுத்தர வர்க்கத்தினரிடமும் சுரண்ட கூடாது. 

 

 கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்பிகா சக்கரை ஆலை முதலாளி, விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கியுள்ளார். இதில் விவசாயிக்கும் அந்த கடனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் வங்கியிலிருந்து விவசாயிகளுக்கு கடனை கட்ட கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ஆலை முதலாளி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அவரது சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.  வங்கிகள் விவசாயிகளிடம் கடனை கேட்பதை தடுக்க தமிழக அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 கிராமப்புறங்களில் 100 நாள் வேலை கிடைக்காமல் ஏழை மக்கள் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில்1000 கோடி ரூபாயை குறைத்துள்ளது.  இந்த திட்டத்தை செல்லாக்காசாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.


 இதையெல்லாம் மாநில அரசு எதிர்த்துக் கேட்காமல் டம்மியாக எடுபுடியாக  உள்ளது. இதனால் மத்திய அரசு தறியில் அருந்த மாடு போல் ஓடிக் கொண்டே இருக்கிறது. 

 

 இந்த 17 ஆவது மக்களவையில் அவசரகதியில் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளனர். மசோதாக்களை நிறைவேற்ற நிலைக்குழு ஹவுஸ் கமிட்டி என்று எதையுமே உருவாக்கவில்லை. இதனால தேசத்தின் அரசியலமைப்பு சாசனத்தை சீர்குலைக்கும் வகையில் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளனர். மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து கடலூர் மாவட்டத்தில் 2 லட்சம் கையெழுத்து இயக்கங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும்  நடந்துள்ளது.

 

 ஜனநாயக ரீதியான கல்வியை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு எல்லா வேலைகளையும் செய்து வருகிறது.  இதனால் பாடத்திட்டம், கல்விக் கட்டணம் பேராபத்தை உருவாக்கும். 

 

 தகவல் உரிமைச் சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் போராடி கொண்டு வந்தது.  அதனை தற்போது நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. தொழிலாளர் சட்டங்களை ஒரே நேரத்தில் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவாக மாற்றியுள்ளனர். அதேபோல் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவையும் செய்துள்ளனர். இதனால் மக்களின் வாழ்வை நசுக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது.

 

 ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அதிகாரம் நீக்கம் என்பது தவறான நிலைப்பாடு.  பல வட கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் அதிகமாக உள்ளார்கள் என்பதற்காக தற்போது காஷ்மீர் ஜம்மு காஷ்மீரை அதன் உரிமையை பறித்துள்ளனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் ரியல் எஸ்டேட் செய்வதற்கும் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

 ஜம்மு-காஷ்மீருக்கு ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளை சார்ந்த ஐந்து பெண்கள் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து உள்ளனர்.  ஜம்மு காஷ்மீரில் மக்கள் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர். ஸ்ரீநகரில் தொடர்ந்து சாலைமறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு அமைதியான நிலைமை உள்ளது என்று கூறுகிறது.  அங்கு பேராபத்து வெடிக்கும் சூழல் உள்ளது .  கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் ஒரு மாநிலத்தின் உரிமையைச் உடைத்துள்ளனர். இதில் வருங்காலங்களில்  தமிழ்நாடும் தப்பாது. இதனை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

 

 தமிழகத்தில் பெண் குழந்தை, பெண்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.  இதற்கு சிறப்பு அமர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டும் அதன் மீது அக்கறை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

 

அதேநேரத்தில் அமித்ஷா யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி என்ற முத்திரை குத்த முடியும் என்ற அளவிற்கு சட்டத்தை மாற்றியுள்ளனர். அவர்கள் எதிர்க்கட்சியே இல்லாத இந்தியாவை உருவாக்கவும், ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் வேலையை செய்கிறார்கள். அதேநேரத்தில் மாநில உரிமையை பாதுகாக்க தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி போராடும் என்றார்.

 

 மேலும் அவர் பேசுகையில் கடலூர் மாவட்டத்தில் காவல்துறை ராஜ்யமாக உள்ளது. அதிமுக பாஜக தவிர மற்ற கட்சிகள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டால் மறுக்கிறார்கள்.  அப்படியே அனுமதித்தாலும் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது.  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், நெய்வேலியில்  காவல்நிலையத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது.

 

  நெய்வேலி என்எல்சி நிர்வாகம் புதிய நியமனங்களில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும், ஏற்கனவே இடம் வழங்கியவர்களுக்கு இழப்பீடுகளை உடனே கொடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எனது தலைமையில் என்எல்சி அதிகாரியை சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சாதிய அடையாள கயிறுகளை அகற்றுவதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது எனக்கூறினார். இந்த சந்திப்பின்போது கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் டி. ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சார்ந்த செய்திகள்