திண்டுக்கல்லில் உள்ள ஒன்றிய பகுதியான பிஸ்மி நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நகர் குழு சார்பாக மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் அக்கட்சியினருடன் சேர்ந்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது; ‘எங்களது கவுன்சிலுக்கு உட்பட்ட ஏ.பி. நகர், பிஸ்மி நகர் பகுதியில் சுமார் 1000 குடும்பத்தினரும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. குறிப்பாக ஆத்தூர் குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஏ.பி. நகரில் இருக்கும் மேல்நிலைத் தொட்டிக்கும், பிஸ்மி நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கும், ஒரே இணைப்பில் இருந்து குடிநீர் வருவதால் போதிய அளவில் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனை மாற்றி பிஸ்மி நகருக்கு தனியாக இணைப்பினை கொடுத்து அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்தால் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க ஏதுவாகும். ஆகவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு திண்டுக்கல் மாநகராட்சிக்கு பரிந்துரை செய்து ஆத்தூர் குடிநீரை மேற்காணும் பிஸ்மி நகர் பகுதிக்கு தனி குடிநீர் இணைப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும்’ என அம்மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சதிப்பின்போது மாவட்டக் குழு உறுப்பினர் ஆசாத் நகரச் செயலாளர் அரபு முகமது, ஒன்றிய கவுன்சிலர் ஜீவா நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.