Skip to main content

மத்திய அரசே விவசாயிகளை வஞ்சிக்கும் அறிவிப்பை ரத்து செய்..! சி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தாலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாறாக உணவு கொடுக்கும் டெல்டா மாவட்டங்களை குறிவைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த 340 இடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் மேலும் கொதித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு மரண அடி கொடுக்கும் விதமாக நெடுவாசல் போராட்டம் அமைந்திருந்தது. அதன் பிறகு கொஞ்ச நாள் அமைதியாக இருந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது மத்திய அரசின் அறிவிப்புகள். 16 ந் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை., சுற்றுச்சூழல் அனுமதியும் தேவையில்லை என்று அந்த அறிவிப்பு சொல்கிறது.

CPI Demonstration


இதனைப் பார்த்த ஒட்டு மொத்த விவசாயிகளும் கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்கட்சிகள் அறிவிப்பை திரும்ப பெறக் கோரி அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடியும் அறிவிப்பால் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

நெடுவாசல் சுற்றியுள்ள இளைஞர்கள் ஜனவரி 26 ந் தேதி நடக்க உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து கிராமங்களிலும் மத்திய அரசு அறிவிப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மா.செ மாதவன் தலைமையில், திருவரங்குளம் ஒ.செ சொர்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விவசாயிகளை வஞ்சிக்கும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதேபோல மற்ற எதிர்கட்சிகளும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். 

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 25 ந் தேதி பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு அமைதியாக இருந்த தமிழ்நாட்டை போராட்டக் களமாக மாற்றி வருகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்