சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், புதன்கிழமை (பிப். 3) சேலம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார். இம்மாவட்டத்தில் இதுவரை 11452 முன்களப்பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள, கோவிஷீல்டு எனும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், இதரப் பணியாளர்கள் என முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 16ம் தேதி இத்தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் புதன்கிழமை (பிப். 3) செய்தியாளர்களிடம் கூறியது, “சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, எடப்பாடி அரசு மருத்துவமனை, ஆத்தூர் அரசு மருத்துவமனை, ஓமலூர் அரசு மருத்துவமனை மற்றும் தம்மம்பட்டி, தலைவாசல், காரிப்பட்டி, பனமரத்துப்பட்டி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், காடையாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 12 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 20 தனியார் மருத்துவமனைகளிலும் இந்தத் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.
சேலம் மாவட்டத்தில், முதல்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி 52,800 டோஸ் வரப்பெற்று, குளிர்பதனக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு டோஸ்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது.
சேலம் சுகாதார வட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 20,794 முன்களப்பணியாளர்கள், ஆத்தூர் சுகாதார வட்டத்தில் 5,524 முன்களப்பணியாளர்கள் என மொத்தம் 26,318 பேருக்கு முதல்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த ஜன. 16 ம் தேதி முதல் பிப். 2ம் தேதி வரை மொத்தம் 32 கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார வட்டங்களில் மொத்தம் 11,452 முன்களப்பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை ஊழியர்கள் 1,384 பேருக்கு இத்தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி குறித்து மக்களிடையே வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நானும் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று போட்டுக்கொண்டேன். அனைவரும் இத்தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்கள் தீவிர கண்காணிப்புடனும், விழிப்புடனும் நடத்தப்பட்டு வருகிறது.” இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்தார்.