கனவுகளில் மட்டுமே பொன் நகைகளை போட்டு அழுகு பார்க்கும் பல ஏழை பெண்களுக்கு கவரிங் நகைகள் வரபிரசாதமாக இருந்து வருகிறது. பொன் நகைகளைவிட மிக அழகாக கவரிங் நகைகளின் டிசைன்கள் பெண்களை கவர்ந்து வருகிறது. கவரிங்கில் பல டிசைன்கள் செய்து மகிழ்விக்கும் கவரிங் தொழிலாளர்களின் வாழ்கையில் மகிழ்வின்றி வேதனையே வென்று வருகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் கவரிங் நகைகளுக்கு பிரசித்தி பெற்றதாகும். கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் கவரிங் நகை செய்யும் தொழிலாளர்கள் இந்த ஊரில் அதிகமாக இருந்தனர். இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு கவரிங் நகைகடைகள் திறக்கப்பட்டுவிட்டது. தமிழக அளவில் சிதம்பரம் கவரிங் என்றாலே அதற்கென தனி சிறப்பு உண்டு. இன்றும் பல பெரு நகரங்களில் கடையின் விளம்பர பலகைகளில் சிதம்பரம் கவரிங் என்று எழுதி வைத்திருப்பதை இப்போதும் காண முடியும்.
இந்த தொழிலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வந்தநிலையில், நாளடைவில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக கவரிங் நகை செய்யும் பணிகள் தற்போது இயந்திரம் மூலம் நடந்து வருவதால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக மாறியுள்ளது.
ஒரு கவரிங் தொழிலாளி ஒருநாள் முழுவதும் உழைத்தால் ரூ 200 முதல் 300 வரை மட்டுமே கிடைக்கும். கடந்த இரண்டு மாதமாக ஏற்பட்டுள்ள கரோனா கோரப் பிடிக்குள் கவரிங் நகை தொழிலாளிகளும் தப்பவில்லை. இதனால் தொழிலாளிகளுக்கு கிடைக்கும் சொற்ப தொகைக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. கவரிங் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் இந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கினர்.
இவர்களில் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இரண்டு முறை தலா ரூ1000 நிவாரணமாக வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சொற்ப எண்ணிக்கையிலான நகை தொழிலாளர்கள் மட்டுமே நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கின்றனர். கைவினை தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களில் பலரும் தங்களது பதிவுகளை புதுப்பிக்காமல் இருந்ததால் அரசு அறிவித்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இதனையறிந்த சில சமூக நலஆர்வலர்கள் இவர்களின் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களை வழங்கியுள்னர். அதுவும் மிகவும் சொற்ப அளவே வழங்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக கவரிங் நகை கடைகள் திறக்கப்பட்டும், கடைகளில் போதிய அளவு வியாபாரமில்லை. கவரிங் நகையை மொத்த விலைக்கு வாங்க வரும் சிறு, சிறு வியாபாரிகள் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வார்கள். தொடர் போக்குவரத்து இல்லாததால் கவரிங் நகைகள் வாங்க வருவதற்குக்கூட ஆளில்லை. கடைகள் திறக்கப்படும்போது வியாபாரம் இன்றி வெறிச்சோடி இருக்கிறது.
கவரிங் கடைகளில் இருந்து நகைகள் வெளியே செல்லாமல் அப்படியே உள்ளதால், கடைகள் திறந்தும் கவரிங் நகை தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் வேதனையடைந்துள்ளனர். பொன் நகைகளைவிட விதவிதமான டிசைன்களில் கவரிங் நகைகள் செய்து பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் தற்போது மகிழ்ச்சி இல்லை.
தமிழக அரசு நலவாரியத்தில் பதிவுசெய்த தொழிலாளர்கள், பதிவு செய்யாத தொழிலாளர்கள் என பார்க்காமல், கவரிங் நகை தொழிலாளி ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு தலா ரூ10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே வேலை இழந்து தவிக்கும் நகை தொழிலாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.