கடந்த 2017ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் தகராறு காரணமாக கொலை செய்யப்படுகிறார். வினோத்குமார் கொலைக்கு பழிதீர்க்க, அவரது நண்பர்களான சி.சூர்யா, ஆர்.சூர்யா, மோகன்ராஜ், விக்னேஷ்குமார், விஜயராஜ் ஆகிய இளைஞர்கள் 5 பேர், கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி 2017ல் செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாநகராட்சி கழிவறை அருகே வினோத்குமார் கொலை வழக்கில் கைதாகி பிணையில் வெளியே இருந்த ஆனந்தகுமார், செல்வராஜா ஆகிய இருவரை பட்டப்பகலில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் துரத்தி கொலை செய்தனர்.
முன்விரோதம் காரணமாக நடந்த இந்த இரட்டை கொலை வழக்கில், 5 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே இருந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு அளிக்கப்பட்டது.
குற்றச்சாட்டப்பட்ட சி.சூர்யா, ஆர்.சூர்யா, விக்னேஷ்குமார், விஜயராஜ் ஆகிய 4 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.12 ஆயிரம் அபராதமும், 3வது சேர்க்கப்பட்ட மோகன்ராஜுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.11ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.