கடந்த 12 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்களில் 70 லட்சத்திற்கும் மேலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் இருவருக்கும் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் ஆரிப், ஆசாத் என இரண்டு பேரை ஹரியானாவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர். இருவரையும் ஹரியானாவிலிருந்து விமானத்தில் தனிப்படை போலீசார் தமிழகம் அழைத்து வந்தனர். நேரடியாக திருவண்ணாமலை அழைத்து வந்து திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் வைத்து அவர்களை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் விசாரணை செய்தனர்.
இவர்கள் இல்லாமல் 8 பேரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், ஆசாத் ஆகியோர் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் வரும் மார்ச் மூன்றாம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.