புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் அரசு தரப்பில் அறிவியல் சாட்சியங்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வேங்கைவயல் பகுதிக்குள் போராட்டங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் ஊருக்குள் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், அந்த குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பின் வழக்கறிஞர் கனகராஜ் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பவானி மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கார்வேந்தன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பு ஆஜராகினர். இதில் இரண்டு தரப்பும் கடுமையான வாதங்களை முன்வைத்தனர். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வசந்தி, பிப்ரவரி 3ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதற்கிடையில், சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது எனப் புகார்தாரரின் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல், குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்களும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கக் கூடாது எனவும் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் சிபிசிஐடி தரப்பிலும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (03-02-25) நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டது. மேலும், வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை வழக்கு இல்லை எனக் கூறி இந்த வழக்கைப் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டது. வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்ற சிபிசிஐடி கொடுத்த மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.