
தமிழ்நாடு நகர்ப்புறத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்துமுடிந்தது. அன்று பதிவான வாக்குகள் நேற்று (22ஆம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அதேபோல், 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளையும், 489 பேரூராட்சிகளில் 435 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
இந்தத் தேர்தலில் சில இடங்களில் கணவன், மனைவி வெற்றி, மாமியார், மருமகள் வெற்றி, அம்மா - மகன் வெற்றி எனப் பல சுவாரஸ்யங்கள் நிகழ்ந்தன. அந்தவகையில், திருச்சி மணப்பாறை நகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட 2 வார்டுகளான 19 மற்றும் 20 வார்டுகளில் வேட்பாளர்களாக ஒரு தம்பதி போட்டியிட்டனர்.
அதன்படி, 19 வார்டில் தங்கமணி என்பவரும், 20வது வார்டில் அவரது மனைவி மனோன்மணியும் போட்டியிட்டனர். இதில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து கட்சியினர் வெற்றி பெற்ற இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.