"இந்தியா உலக அரங்கில் முன்னேறி வருகிறது, தொழில் புரட்சியும், பொருளாதார வளர்ச்சியும் வேகமாக உயர்ந்து வருகிறது" என்று பிரதமர் மோடியும், அவரின் அமைச்சர்களும் பேசிவருகின்றனர். ஆனால், உண்மையில் நடுத்தர, சிறு, குறு தொழில் புரிவோர், அதில் ஈடுபடும் அனைவரும் விலையேற்றத்தால் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தியாவில் விளையும் பஞ்சை மூன்று நான்கு ரகமாக பிரித்து முதல் ரக பஞ்சு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டாம் மூன்றாம் தரமாக உள்ள பஞ்சை தான் நூலாக்கி இந்திய ஜவுளி உற்பத்திக்கு மத்திய அரசு கொடுக்கிறது. தற்போது அதையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, மீதி உள்ள பஞ்சை ஆன்லைன் வியாபாரமாக்கிவருகிறது. இதன் விளைவு ஒவ்வொரு நாளும் பங்கு சந்தை புள்ளிகள் உயர்வது போல விலை ஏற்றம் இருநூறு மடங்கு வரை கூடுதலாக மிக கடுமையாக உயர்ந்து விட்டது.
உதாரணத்திற்கு இன்று ஒரு லுங்கி அடக்க விலை 70 ரூபாய் என்றால் அது 100 ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் ஒரே நாளில் அடக்க விலை 200 ரூபாய் என்றால் அந்த லுங்கியை 300 ரூபாய்க்கு எப்படி விற்க முடியும்?
இந்நிலையில் பா.ஜ.க.அரசை கண்டித்தும், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை குறைக்க வேண்டுமெனவும் ஈரோடு ஜவுளி வியாபாரிகள் 16, 17 என இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் ஈரோட்டில் 20 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்.
ஈரோட்டில் மட்டும் ஒரு நாளைக்கு ரூபாய் இருநூறு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் கலைச்செல்வன் நம்மிடம்,
"கடந்த 18 மாதங்களாக நூல் மற்றும் பருத்தி விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். சில நாட்களுக்கு முன்பு பருத்தி மீதான இறக்குமதி வரி 11 சதவீதத்தை மத்திய அரசு வருகிற செப்டம்பர் 30 வரை மட்டுமே நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் பருத்தி இறக்குமதி செய்வது என்பது 45 அல்லது 60 நாட்கள் ஆகும். உள்ளூரில் கடந்த சில வாரங்களில் 40 நம்பர் நூல் விலை ரூபாய் 200 லிருந்து 400க்கும், 30 ரகம் ரூபாய் 170 லிருந்து 340 எனவும், 20 நெம்பர் ரகம் நூல் விலை 140 இருந்து 260 ரூபாய் என ஒரு கிலோவுக்கு உயர்ந்துள்ளது.
356 கிலோ பீல் பஞ்சு விலை ரூபாய் 43 ஆயிரத்திலிருந்து திடீரென ரூபாய் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது .இதனால் ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் அங்கு செயற்கை இழை நூல் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் இதன் பாதிப்பு அங்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், தமிழகம் பருத்தி நூல் மற்றும் ஆடை உற்பத்தியில் தான் முன்னணியில் இருக்கிறது. எனவே இங்கு தான் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுகிறார்.
பொதுவாக இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தியை காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் கொள்முதல் செய்து நூல் மில்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் வட இந்திய வியாபாரிகள், புரோக்கர்களுக்கும் பஞ்சு வர்த்தகர்களுக்கும் வழங்குகிறார்கள். அவர்கள் ஆன்லைன் மூலம் பஞ்சின் விலை பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள். மேலும் இப்படி விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காக பஞ்சு பதுக்கலும் நடைபெறுகிறது. எனவே காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நேரடியாக பஞ்சை நூல் மில்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். பஞ்சு பதுக்கலை தடுக்க அத்தியாவசிய பொருட் சட்டத்தின்கீழ் பஞ்சை கொண்டு வரவேண்டும்.
சில நாட்களுககு முன்பு கோதுமையின் விலை உயர்ந்ததால் மத்திய அரசு அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. ஏனென்றால் உணவுப் பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல் பருத்தியை கொண்டு வந்தால் பருத்தி மற்றும் நூல் விலையை முழுமையாக கட்டுப்படுத்தலாம். பொதுவாக நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி நூல் உற்பத்தி எவ்வளவு ஏற்றுமதி எவ்வளவு என்ற புள்ளிவிபரங்கள் கூட இந்த மத்திய அரசிடம் துல்லியமாக இல்லை. எனவேதான் தற்போது பிரச்சனை தோன்றியுள்ளது. நாட்டில் தற்போது 40 லட்சம் பேல் நூல் பற்றாக்குறை உள்ளது என்கிறார்கள். இதை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 25 சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ஈரோட்டில் ஜவுளி டையிங் பிராசஸிங் போல்டிங் பேக்கிங் தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மத்திய அரசு நினைத்தால் பஞ்சு ஏற்றுமதியை தடை செய்வதோடு வட மாநில வியாபாரிகள், புரோக்கர்கள் பஞ்சு ஆன்லைன் வியாபாரம் செய்வதை தடை செய்யலாம் ஆனால் தமிழக நெசவாளனின் குரலை கேட்பதற்கு தயாராக இல்லை இந்த மத்திய அரசு என்பது தான் வேதனை" என்றார்.