சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமைகளில் பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று (மார்ச் 16) நடந்த ஏலத்தில் நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15600 பருத்தி மூட்டைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
ஆர்சிஹெச் ரக பருத்தி குவிண்டால் 4679 முதல் 5419 ரூபாய் வரையிலும், டிசிஹெச் ரக பருத்தி குவிண்டால் 6209 முதல் 7889 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 3.10 கோடி ரூபாய்க்கு பருத்தி விற்பனை ஆனது.
ஈரோடு, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பருத்தி ஆலை உரிமையாளர்கள், அதன் பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டு போட்டிப்போட்டு ஏலம் எடுத்தனர். பருத்திக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்தால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏலம் முடிந்ததும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் விற்பனைத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டது.