கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கோவை மாவட்டம், பணப்பெட்டி கிராமத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் புகார்களை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்ஷன் - கமிஷன் - கரப்ஷனில் ஈடுபடும் ஊழல் அதிமுக அரசை கண்டித்து, கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் இன்று ஊழல் அதிமுக அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றது. இதற்கு அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற்றுள்ளோம். இதற்கு எடப்பாடிக்கு நன்றி, தலைவர் கலைஞரின் மறைவிற்கு பிறகு கூட நீதிமன்றம் சென்றுதான் அவரது இடத்தை பிடித்தோம். எடப்பாடி எப்போதும், அம்மாவின் ஆட்சி நடைபெறுகின்றது என்று சொல்கின்றார். ஒருவேளை அந்தம்மா இப்போது இருந்திருந்தால், இவர்கள் சிறையில் தான் இருந்திருப்பார்கள். இப்போது உள்ள அதிமுக அமைச்சர்கள் வீடு புகுந்து திருடவில்லை. அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. விரைவில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வார்கள். இங்குள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி அல்ல ஊழல் மணி. இவர் கோவையில் உள்ள 8 குளங்களில் உள்ள ஆகாயதாமரைகளை அகற்றுவதாக கூறி பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். இதை பொதுபணித்துறை வந்து பார்த்தபோது தான் இங்கு பணியே நடைபெறவில்லை என்றும், அவர்கள் கூறியதில் ஒரு குளத்தையே காணவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 38,000 போராட்டத்திற்கு நாங்கள்தான் அனுமதி வழங்கியுள்ளோம் என எடப்பாடி கூறுகின்றார்.
மக்கள் நிம்மதியாக இல்லை என்பதால்தான் போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த அறிவு கூட இல்லாதவராக உள்ளனர். எடப்பாடி ஒரு கூட்டத்தில் தலைவர் குறுக்கு வழியில் வந்ததாக கூறியுள்ளார். நீங்கள் எப்படி இருந்தீர்கள் என அனைவருக்குமே தெரியுமே, சசிகலாவின் காலை பிடித்து வந்தவர்கள். தலைவர் கலைஞரே, தலைவரை பற்றி கூறியுள்ளார் உழைப்பு உழைப்பு என்று. வாரிசு அரசியல் என திமுகவை கூறுவது சரியல்ல. நான் அரசியலுக்கு வந்தது தலைமை பொறுப்பை ஏற்பதற்கு அல்ல கடைசி தொண்டனுக்கு தோள் கொடுப்பதற்காக என பேசினார். இதைத்தொடர்ந்து, மணிமாறன் வீரவாளை உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசளித்தார்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் எம்எல்ஏ, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், நெல்லிக்குப்பம் புகழேந்தி எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி, தமிழ்மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.