கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், குடும்பத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் "தனிமைப்படுத்தப்பட்ட நபருக்குத் தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருக்கும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் செல்லாமல் தனது அறையிலேயே இருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு ஒருவர் மட்டுமே முகக் கவசம், கையுறை அணிந்து பராமரிப்பு பணிகளைச் செய்ய வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. தனிமைப் படுத்தப்பட்டவருடன் வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் எந்தத் தொடர்பும் கொள்ளாமலிருக்க வேண்டும். தனிமையிலிருப்பவரின் உடை, படுக்கைவிரிப்பை உதறாமல் தனியாகச் சோப்பு நீரில் ஊறவைத்து துவைக்க வேண்டும். வீட்டை தினமும் 3 முறையாவது கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.