Skip to main content

'கரோனா பீதியைத்' தவிர்க்க நேர்மறை சிந்தனை அவசியம்! -மனநல ஆலோசனை வழங்க பெரியார் பல்கலை ஏற்பாடு !!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020


கரோனா வைரஸ் பீதியால் உளவியல் சிக்கலில் உழன்று கொண்டிருப்போரை மீட்கும் வகையில் சேலம் பெரியார் பல்கலை மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி மாலை முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.மக்கள் பொது இடங்களில் கூடுவது, தேவையின்றி நடமாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. 

நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள சமூக இடைவெளி கட்டாயம் என்று அறுவுறுத்தப்பட்டு உள்ளது.இதுபோன்ற கட்டுப்பாடுகளால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பலர், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
 

coronavirus salem periyar university arranged peoples counselling


மதுரையில் ஒருவர் வீட்டில் அடைந்து கிடந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதும்,மற்றோர் இடத்தில் வீட்டில் அடைந்து கிடந்த விரக்தியில் மூதாட்டியை ஒருவரை கடித்தே கொன்ற சம்பவமும் நடந்துள்ளன. 

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலையின் உளவியல் துறை, மனநல சிக்கலில் உழன்று கொண்டிருப்போருக்குத் தகுந்த உளவியல் ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளது. 

இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் கூறுகையில், ''கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.அதேநேரம், இதுபோன்ற செய்திகளை ஊடகங்களில் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.இணையத்தளங்களில் தேவையற்ற நோய்க்குறிகள் சார்ந்த தகவல்களைத் தேட வேண்டாம்.கரோனாவால் பலியானவர்கள் குறித்த செய்திகளைச் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இதமான இசையைக் கேட்டு ரசிக்கலாம். 

வீட்டில் இருக்கும் இதுபோன்ற தருணங்களில் குழந்தைகளுடன் விளையாடலாம். அவர்களுக்கு கதைகள் சொல்லியும், அவர்களின் எதிர்காலம் குறித்தும் விவாதிக்கலாம்.நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் சரியான முறையில் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கலாம். 

நேர்மறை சிந்தனைகளை வளர்த்தெடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.எதிர்மறையான சிந்தனைகள் உங்கள் உடலின் எதிர்ப்பாற்றலை குறைத்து விடும். 

மேலும் மனநல ஆலோசனைகள் பெற விரும்புவோர், உளவியல் துறை பேராசிரியர்களை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 94434 96299, 99946 20123, 80126 98558 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார். 

 

சார்ந்த செய்திகள்