தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நாளை (20/04/2021) முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை (20/04/2021) அனைத்து மதங்களைச் சேர்ந்த குருமார்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். அதேபோல், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்களில் வழிபாட்டு நேரங்களைக் குறைப்பது தொடர்பாகவும் தலைமைச் செயலாளர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.