பிரிட்டனில் வீரியமிக்க கரோனா பரவுவதால் அங்கிருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சென்னை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன், "பிரிட்டனில் கரோனா தீவிரமடைந்துள்ளது குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. லண்டனிலிருந்து சென்னைக்கு மூன்று விமானங்கள் வந்துள்ளன; பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கரோனா உறுதியான நபர் வீட்டுத் தனிமையிலிருந்து கிண்டியில் உள்ள கிங் மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கரோனா உறுதியான நபரின் சளி மாதிரி புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சளி மாதிரி ஆய்வுக்கு பிறகே வீரியமிக்க கரோனாவா? வீரியமில்லாத கரோனா என்பது தெரிய வரும். இங்கிலாந்திலிருந்து மற்ற நாடுகள் வழியாக தமிழகம் வரும் அனைவரும் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். கடந்த 10 நாட்களில் பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் விவரங்கள் திரட்டப்பட்டு வருகிறது" என்றார்.