“கரோனா கால உதவி என்றாலும் மக்களின் தேவையறிந்து செய்தலே சரி..” எனச் சொல்லும் சமூக ஆர்வலர் சரவணகாந்த். “அவங்கவங்க இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக, வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்ல போட்டோ போடணும்னு அளவுக்கு மீறி ஏதாச்சும் பண்ணிட்டே இருக்காங்க. நேத்து சிவகாசில பெரும்பாலான ஸ்ட்ரீட் லைட்ஸுக்கு கீழே சாப்பாடு பொட்டலங்கள், பாதி பிரித்தும், முழுவதுமாய் கொட்டியும் கிடந்துச்சு. என்கிட்ட நண்பர் ஒருத்தர் வருத்தப்பட்டுச் சொன்னது ஆச்சரியமா இருந்துச்சு. அவரோட ஊருக்கு காலையும், மதியமும் உணவுப் பொட்டலம் வந்துக்கிட்டே இருக்காம். அதையெல்லாம் மாட்டுக்கு போட்டுக்கிட்டு இருக்காங்களாம். வேணாம்னு சொல்ல முடியல. நம்ம ஊரு பசங்களும் அவங்ககூட வர்றாங்க. ஏதாச்சும் ஒரு பேனரை மாட்டிக்கிட்டு இந்த சேவையை பண்ணுறாங்கன்னு நொந்துக்கிட்டார். இவங்கள்லாம் கூட்டத்த கூட்டாம வீட்ல இருக்கிறதே சமூக சேவைதான். தெரியாமலா முன்னோர் சொல்லி வச்சிருக்காங்க? பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு..” என்றார்.
ராஜா சொர்ணம் என்பவர் “இங்கே மாரியம்மன் கோவில் பக்கத்துல உணவுப் பொட்டலமும் வாட்டர் பாட்டிலும் கொடுத்துக்கிட்டிருந்த ரெண்டு பேர், டூ வீலர்ல வந்துக்கிட்டிருந்த ஒரு பெண்ணிடம் வாட்டர் பாட்டிலை நீட்ட, ‘ஏற்கனவே மூணு வாங்கிட்டோம். வேணாம்.’னு வாங்காம போயிட்டார். உடனே, அந்த ரெண்டு பேரும் ‘சரி.. வாடா போவோம்’னு கிளம்பிட்டாங்க.” என்றார்.
ராஜபாளையத்திலிருந்து குவைத்ராஜா மக்கள் சமூக இயக்கத்தினர், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் தேவையறிந்து, அங்கே சென்று முகக்கவசங்கள், பிரியாணி பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்களை வழங்கியிருக்கின்றனர். அரசு மகப்பேறு மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இதே ரீதியில் தந்துவிட்டு, காவல்துறையினருக்கும் கொடுத்துள்ளனர்.
இக்கட்டான கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் இன்முகத்துடன் பிறர் பசியாற்றுவோர் நம்மிடையே வாழ்வது, மனிதகுலத்துக்கு ஆறுதலளிப்பதாக உள்ளது.