சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழுவின் பிரதிநிதிகள் குகானந்தம், ராமசுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது; "தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்பாக முதல்வரிடம் ஐந்தாவது முறையாக ஆலோசித்தோம். கரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் எனக் கூறியிருந்தோம்; அதுபோல் நடக்க உள்ளது. பரிசோதனைகள் அதிகமாகச் செய்யச் செய்யப் பாதிப்பைக் கண்டறிந்து உயிரிழப்பைத் தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கண்டறிந்து கரோனா பரிசோதனை செய்யக் கூறியுள்ளோம்.
சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பைக் குறைக்க சென்னையில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உச்சம் தொட்ட கரோனா குறைய ஆரம்பித்தாலும் மூன்று மாதத்திற்குப் பின் மீண்டும் அதிகரிக்கும். சீனாவில் இரண்டாவது அலை ஆரம்பித்தது போல் தமிழகத்திலும் மூன்று மாதத்திற்குப் பின் ஆரம்பிக்கலாம். அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம் தான் கட்டுப்படுத்த முடியும். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் தயாராக இருக்கிறது." இவ்வாறு மருத்துவ நிபுணர் குழு பிரதிநிகள் கூறினர்.