புளியங்குடியில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை உயர்அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே 6 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஹைகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று புளியங்குடியில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று அவர்களும் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரசபை சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், வருவாய் துறையினர், போலீசார் அந்த தெரு மற்றும் அந்த தெருவை சுற்றியுள்ள அனைத்து தெருக்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
அந்த தெருவை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். புளியங்குடி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு அனைத்து தெருக்களும் கட்டைகள் மற்றும் தகர சீட்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. புளியங்குடி நகர எல்லைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள், அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புளியங்குடியில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
போலீசாரின் வாகன சோதனையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. நகரசபை ஊழியர்கள் போலீசாருடன் இணைந்து அந்தப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் தெருக்கள் முற்றிலுமாக தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. அந்த தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த தெருக்களில் உள்ள அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்களில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க நகரசபை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநருமான எம்.கருணாகரன், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தா் தயாளன், காவல்துறை கூடுதல் இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால், நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபினவ், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோர் புளியங்குடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைககள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
ஆய்வின் போது, கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா மற்றும் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார், நகரசபை ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன், தூய்மை இந்தியா பணிகள் மேற்பார்வையாளர் விஜயராணி மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.