தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411ல் இருந்து 485ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள 485 பேரில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.