முகக்கவசம் ஒன்றின் அடிப்படை விலையே நான்கு ரூபாய்தான். தற்போதைய கரோனா அச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு முகக்கவசம் ஒன்று 50 வரை போய் 100 எண்ணிக்கை கொணட பேக்கேஜ் ஒன்று, நான்காயிரம் விலை என்று எல்லை தாண்டியது, இதன் பதுக்கல் மற்றும், பறக்கும் விலை பற்றி ஏற்கனவே 10 தினங்களுக்கு முன்பு நக்கீரன் இணையதளம் விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. அது குறித்த தகவலையும் நெல்லை கலெக்டர் ஷில்பாவின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தோம். நக்கீரன் இணையதள செய்தியின் அடிப்படையில் தட்டுப்பாட்டைப் போக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முககவசம் தயாரிக்கும் பணியைத் தற்போது விரைவு படுத்தியிருக்கிறார் கலெக்டர் ஷில்பா.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது என தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. முக கவசம் அணிந்து கொண்டால் தொற்றுக்கள் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம் என்ற நிலை உள்ளது. அதே நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் முக கவசம் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. தற்போது அதிக விலைக்கு முகக் கவசங்கள் விற்கப்படுகின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் மகளிர் திட்டத்தின் மூலம் சுய உதவி குழுவில் உள்ள பெண்களை வைத்து முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார். அந்த முகக்கவசங்களின் தன்மை மற்றும் தரத்தை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் நெல்லை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவிலிருந்தும் பலர் திரும்பியுள்ளனர். அவர்கள் விவரம் கண்டறியப்பட்டு, தற்போது அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறனர். நோயின் அறிகுறிகளை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருமல் காய்ச்சல் வெளியூர் பயணம் இந்த அடிப்படையிலேயே தான் உள்ள நபர்களுக்கு சோதனைகள் செய்யப்படுகிறது. சோதனைகளின்படி பலர் வீட்டில் இருந்தபடியே காத்துக் கொள்கிறார்கள். சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நெல்லை மாவட்டத்தில் இந்த நோய் யார் மீதும் தாக்குதல் ஏற்படுத்தவில்லை. கண்காணிக்கப்பட்ட பத்து நபர்களில் இருந்து 12 பேர் வரை மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த முககவசம் தனியாரின் ஒரு சில இடங்களில் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவானது. அதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அளிக்கும் இந்த முககவசத்தை சுய உதவி குழுவிலுள்ள பெண் தையற் கலைஞர்களை வைத்து தயாரிக்க திட்டமிட்டு அதன்படி பணியாற்றி வருகிறோம் 7 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை தயாரிப்பு செலவாக உள்ளது. இந்த முககவசம் முதலில் அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். தொடர்ந்து கிராம பஞ்சாயத்துகளுக்கு வீடு வீடாக வழங்கப்படும். அதன் பின்பு தொடர்பு கொள்ளும் தனியார்களுக்கும் தயாரித்து கொடுக்கப்படும். ஏற்கனவே வந்த புகார்களின் அடிப்படையில் முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படும் கடைகளை வட்டாட்சியர் மூலம் கண்காணித்து வருகிறோம். அதிக விலைக்கு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் பேருந்துகளை இயக்குவதில் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அரசு அறிவிப்பின்படி திரையரங்கு, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன" என தெரிவித்தார்.