மனித குலத்தை அச்சுறுத்தி வருகிற கரோனா வைரஸ் உலக இயக்கத்தையே முடக்கிப் போட்டு விட்டது. சீனாவில் தொடங்கி 170 நாடுகளில் கரோனா வைரஸின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இந்தியாவில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், பார்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. மக்கள் பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், "முதலமைச்சர் உத்தரவுபடி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் என்னை சந்திக்க பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் எனது கோபிசெட்டிபாளையம் வீட்டிற்கோ அல்லது சென்னையில் உள்ள எனது வீட்டிற்கோ வர வேண்டாம்" என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்திலுள்ள தனது தோட்டத்தின் முன்பு பேனர் அடித்து கட்டியுள்ளார்.
போர்க்கால அடிப்படையில் பணிகள் நடக்கும்போது அதை முன்னின்று செய்வது அமைச்சர்களும் அதிகாரிகளும் தான். ஆனால் ஒரு சீனியர் அமைச்சரே என்னை சந்திக்க யாரும் வராதீர்கள் என அறிவிப்பு கொடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.