திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் ராஜ்மோகன், அர்பன் பேங்க் தலைவர் பிரேம், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது "திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 170 பேரை தனிமைப் படுத்தி வீட்டில் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறிகள், பால், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க குறித்த நேரத்தில் சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் மூடப்படவில்லை. அங்கே மக்கள் கூட்டம் அதிகமாக காலை நேரத்தில் கூடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு பகுதிகளில் பிரித்து காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் அந்த பகுதிகளில் சென்று கூட்டம் போடாமல் வாங்கிச் செல்ல வேண்டும். காய்கறிகள் எந்த இடங்களில் விற்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விரைவில் அறிவிப்பார்.
அத்தியாவசிய தேவைக்காக பொது மக்கள் தினமும் அரை மணி நேரம் மட்டும் வெளியே வந்து வாங்கி கொண்டு பிறகு மீண்டும் வீட்டிற்கு சென்று விட்டால் தொற்று நோய் பரவலை தடுக்க முடியும். ஆதரவற்றவர்கள், வீடில்லாமல் பொது இடங்களில் தங்கி யுள்ளவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு இடத்தில் சமைத்து உணவு அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் அம்மா உணவகம் செயல்படுகிறது. பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி பொது மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.