கைத்தறி நெசவாளர்களின் நலன் காக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரின் கோரிக்கைகள் பின்வருமாறு:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் சின்னாள பட்டியில் சுமார் இரண்டாயிரத்து மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர சுங்குடி மற்றும் சாய தொழிலாளர்கள் சுமார் 4000 பேர் உள்ளனர். கடந்த 10 நாட்களாக இவர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை நிறுத்தப்பட்டதால் அதில் உள்ள பயனாளிகள் வயதான முதியோர்களுக்கு ஊராட்சிகள் மூலம் உணவு வழங்கப்படுவது போல் ஏழை நெசவாளர் மற்றும் சுங்குடி தொழிலார்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டும்.
இதுதவிர வறுமையில் வாடும் சுங்குடி தொழிலாளர்களுக்கும் முறையாக நிவாரண உதவி வழங்கவேண்டும். இதுதவிர சின்னாளபட்டியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு முறையாக நிவாரண உதவிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.