திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே உள்ளது தெற்கு விராலி பட்டி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக் கிராமத்தில் அரசு அனுமதி இன்றி மதுபானங்களை சிலர் இரவு பகலாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து சிறுசிறு பிரச்சினைகள் நாள்தோறும் எழுவதாகவும் டீ, காபி கிடைப்பது போல் மது பாட்டில்கள் தாராளமாக கிடைப்பதால் குடும்பத்தில் அதிக அளவில் பிரச்சினை ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி மது விற்பனையை தடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். அதில் தங்கள் கிராமத்தில் தொடர்ந்து நடைபெறும் அனுமதி இல்லாத மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
நிலக்கோட்டை தாலுகாவில் ஏற்கனவே செல்லிங் விற்பனை என்னும் அனுமதியில்லாத மது விற்பனையால் ஏற்பட்ட தொழில் போட்டியில் இரண்டு பேர் மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதிகளில் செல்லிங் என்ற அனுமதி இல்லாத மது விற்பனை நடைபெற்று வருகிறது. காவல்துறை மற்றும் ஆளும் கட்சியினர் ஆதரவு இருப்பதால் பயமின்றி தாலுகா முழுவதும் மது விற்பனை நடைபெறுகிறது. உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.