சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. உலக அளவில் 1,98,214 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிகவளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகளும் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.