அரியலூர் மாவட்டத்தில், இருந்து டெல்லி மாநாட்டிற்கு ஐந்து நபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் ஐவரையும் அடையாளம் கண்டு, அவர்களை அரியலூர் அரசு மருத்துவமனை சிறப்பு சிகிச்சை பிரிவில் அதிகாரிகள் கொண்டுவந்து சேர்த்தனர். இவர்களுக்கு கரோனா நோய் தொற்று பரவி இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கரோனா சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் செந்துரையை சேர்ந்த ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செந்துறை பகுதியை சுற்றிலும் ஏழு கிலோமீட்டர் சுற்றளவில் ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டது.
இதனால் செந்துறையில் இருந்து ஜெயங்கொண்டம் அரியலூர், மாத்தூர், குழுமூர், பொன்பரப்பி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் உள்ளே நுழையாமல் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பவர்கள் வெளியே போகாமலும் தடுக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரால் மிகுந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சுற்றளவில் உள்ள ஐம்பது கிராமங்களில் வசிக்கும் 38,424 மக்களுக்கு வட்டார மருத்துவ அதிகாரி இந்துமதி தலைமையில், 150 சுகாதாரப் பணியாளர்களை கொண்டு வீடு வீடாக மருத்துவ பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.