சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனாவால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் 271 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடாக, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாகவும் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறி, மருந்து உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் பரிசோதனைகளுக்குப் பின் அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கரோனா தாக்கத்தின் காரணமாகச் சட்டப்பேரவை முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுகிறது. சென்னையில் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.