கரோனா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம், சோப்புகள், திரவ சோப்புகள், போன்றவற்றை பயன்படுத்த வேண்டுமென மக்களை அறிவுறுத்தியபடியே உள்ளனர். கைகளில் தேய்த்துப் பயன்படுத்தும் கிருமிநாசினியும் இதில் அடக்கம். இவற்றை அதிக விலைக்கு விற்பதாகவும், அப்படி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பிலேயே எச்சரிக்கின்றனர்.

தட்டுப்பாடு காரணமாக மேற்கண்டவை பல மருந்துக்கடைகளில் கிடைப்பதில்லை. இந்த இக்கட்டான நேரத்தில், தமிழக அரசின் அம்மா மருந்தகங்களும், மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களும் உரியவிலையில் தரமான முகக்கவசம் போன்றவற்றை மக்களுக்குக் கிடைக்கச் செய்யலாமே?
ஏழை மக்கள், மலிவு விலையில் தரமான மருந்துகளைப் பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொடங்கப்பட்டவைதான் மக்கள் மருந்தகங்களும் (பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா) தமிழக கூட்டுறவுத்துறையால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களும்.

கரோனா அச்சத்தால் மக்கள் பெரும் பரிதவிப்பில் உள்ள இந்த நேரத்தில், மக்கள் மருந்தகங்களும், அம்மா மருந்தகங்களும் முகக்கவசம், கிருமிநாசினி திரவம் போன்றவை, உரிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தங்களை அதிகார நாற்காலியில் அமர வைத்த மக்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும், மருத்துவப் பாதுகாப்பு தரவேண்டிய தருணம் இது!