
உலக அளவில் கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்கள் தினசரி செத்துச் செத்துப் பிழைக்கிறார்கள். அந்த நோய் நமக்கு வந்துவிடுமோ என்று ஒவ்வொருவரும் அச்சத்தில் உள்ளனர். மரண பயத்தை உருவாக்கி வருகிறது கொரானா நோய்.இந்த நிலையிலும் இரவு பகல் பாராமல் துணிவோடு சமூகப் பணியைச் செய்து வருகிறார்கள் விழுப்புரத்தில் உள்ள "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்ற அமைப்பினர்.
இவர்கள் கடந்த 22ஆம் தேதி முதல் இன்றுவரை சுமார் 10 நாட்களாக இவர்களுக்கு உரிய சீருடையில் உணவு தயாரித்து பஸ் நிலையம், ரயில் நிலையம், பாண்டிச்சேரி சாலை,நான்கு முனை சந்திப்பு என நகரின் முக்கியப் பகுதிகளில் உணவு கிடைக்காமல், உணவு வாங்க பணமில்லாமல் பசியோடு இருக்கும் ஆதரவற்ற முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு தினசரி 70- க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேடித் தேடி உணவளித்து வருகிறார்கள்.

விழுப்புரத்தில் 3 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்ட உடன் நகர மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் வீடுகளை விட்டு வெளியில் வராமல் அச்சத்தில் பயத்தில் உறைந்து போய் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.இந்த நிலையிலும் மேற்படி அமைப்பினர் தகுந்த பாதுகாப்பு முகக் கவசத்துடன் உணவு தயாரித்து வீதி வீதியாகச் சென்று கொடுத்து வருகிறார்கள்.இவர்களின் தன்னலமற்ற சேவையை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி ஊக்கப் படுத்தியுள்ளார்.மேலும் இவர்கள் தங்கள் சொந்த செலவில் உணவு தயாரித்துத் தேடிச் சென்று கொடுத்து வருவதை அறிந்த சில மனிதநேய பற்றாளர்கள் உணவுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.
அப்படி யாரும் ஏற்றுக் கொள்ள முன் வராவிட்டாலும் தங்கள் சொந்த செலவில் உணவு தயாரித்து வழங்கி வருகிறார்கள் 'யாதும் ஊரே,யாவரும் கேளிர்' என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வது எங்களுக்கு மன நிம்மதியைத் தருகிறது. இந்தச் சூழ்நிலையிலும் மிகுந்த பாதுகாப்போடு இந்தப் பணியைச் செய்து வருகிறோம்.எங்களுக்கு அரசு அதிகாரிகள் காவல்துறையினர் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.அவர்களுக்கும் தொந்தரவு இல்லாத வகையில் எங்கள் பணி தொடர்கிறது’’ என்கிறார்கள் விழுப்புரம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" அமைப்பினர்.