கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தற்போது நாடு முழுவதும் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. அதேநேரத்தில் கரோனா மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முகக் கவசம், தனிமனித இடைவெளி போன்றவை தற்காலிகமாக நம்மை கரோனாவிலிருந்து தற்காத்தாலும், நிரந்தர தீர்வாக மரணங்களிலிருந்து காக்கக்கூடியதாக கரோனா தடுப்பூசிகளே இருக்கின்றன. இந்தியாவில் தற்போது அரசு சார்பில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
அண்மையில் மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம், கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும், 66,000 பாலூட்டும் தாய்மார்களுக்கும், 44,000 கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், ஜூலை 18ம் தேதிவரை 43,855 கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில், 59 பெண்கள், தங்கள் கருவுறுவதற்கு முன்பு முதல் டோஸை செலுத்திக்கொண்டுள்ளனர். தங்களது இரண்டாவது டோஸை கர்ப்பிணி ஆனபிறகு எடுத்துக்கொண்டுள்ளனர். அதேபோல், பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் 65,929 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.