
கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-ஐ தாண்டியுள்ளது. குறிப்பாக விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் கரோனா உயிரிழப்பு அதிகரிப்பதாலும், தொற்று வேகமாக பரவுவதாலும் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடந்த 18ம் தேதி விருத்தாசலம் வட்டாட்சியராக இருந்த கவியரசு கரோனா தொற்றினால் உயிரிழந்தார். மேலும் விருத்தாசலம் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் திட்டக்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விருத்தாசலம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பண்ருட்டி சட்டமன்ற அ.தி.மு.க உறுப்பினர் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வமும் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று (22.07.2020) திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய ஏழு போலீசார் உட்பட வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் என திட்டக்குடி தாலுகாவில் 19-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்களிடைய பதட்டம் நிலவுகிறது.

அதேசமயம் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசங்கள் அணியாமலும் கூட்டம் கூட்டமாக நகர் புறத்தில் சுற்றி திரிகின்றனர். மேலும் வணிக நிறுவனங்கள், உணவகங்களில் எவ்வித விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் செயல்படுவதால், அதிக அளவு தொற்று ஏற்பட இது வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதையடுத்து நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் முழு கடையடைப்பும், ஜூலை 31-ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பது எனவும் விருத்தாசலம் பகுதி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். அதுபோல் கடலூர், வடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு கடையடைப்பு நடத்த போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.